சின்னப் புழுவை பெரிய புழு விழுங்குகிறது.
தனபாலா
'இன்றைய சக்கரவர்த்தி நாளைய கைதி, இன்றைய கைதி நாளைய சக்கரவர்த்தி' என்றொரு வாக்கியம் பழைய ஏற்பாட்டில் உண்டு. நேற்றைய யுத்த சக்கரவர்த்தியான சரத் பொன்சேகா இன்றைய கைதியாக, அவருடைய இராணுவத்தாலேயே சுற்றிவளைக்கப்பட்டிருப்பது மேற்படி கூற்றை உயிருள்ளதாக்கி இருக்கிறது.
ஒரு சீனக் குட்டிக்கதை இங்கு மேலும் பொருத்தமுள்ளதாகும் போல் தெரிகிறது. அதாவது பிணக்கிடங்கில் புழுக்கள் தோன்றுவதாகவும், சின்னப் புழுக்களை பெரிய புழுக்கள் விழுங்குவதாகவும், இறுதியாக ஒரு பெரிய புழு ஏனைய புழுக்கள் அனைத்தையும் விழுங்கி பன்றி போல் கொழுத்திருப்பதாகவும், அப்போது சமையற்காரன் கொழுத்த பெரும் புழுவை சமைத்து மேசையில் விருந்து படைப்பதாகவும் அக்கதை முடிகிறது.
இப்போது மகிந்த எனும் பெரும்புழு சரத் எனும் சிறுபுழுவை விழுங்கிய ஒரு கட்டம் தற்போது அரங்கேறியுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவு சர்வதேச சமூகத்திற்கும், தமிழ் மக்களுக்கும், அரசியல் தலைமைகளுக்கும் ஒரு செய்தியைச் சொல்கிறது. அதாவது சிங்கள இனவாதம் சமரசத்திற்கு இடமற்ற இனவழிப்புக் கொள்கையை இலட்சியமாகக் கொண்டு இயங்கும் ஒரு கோட்பாடும், நடைமுறையும் என்பதை அது மீண்டும் ஒரு தடவை ஆணித்தரமாய் அறிவித்துள்ளது.
வன்னிப் பெருநில இன அழிப்பின் பின்பும் கூட சிங்கள இனவாதம் நீதியற்றதும், விட்டுக்கொடுப்பற்றதும் என்பதை தன் வாக்குச்சீட்டின் மூலம் அது உலகிற்கு உணர்த்தியிருக்கிறது.
சரத் பொன்சேகா வெற்றி பெறுவார் என எல்லாக் கணிப்பீடுகளும் முதலில் கூறிக் கொண்டன. அவ்வேளை பொங்கு தமிழில் வந்த கட்டுரைகள் அதற்கு எதிரான வாய்ப்புக்களைப் பற்றிப் பேசின. தனபாலா, சூரியன் என்போரது கட்டுரைகள் மேற்படி எதிர்மாறான கருத்துகளை அடையாளம் காட்டத் தவறவில்லை. 'புள்ளி விபரத்தின் படி பொன்சேகாவுக்கு வெற்றி வாய்ப்பு உண்டு' எனத் தெரிகின்ற போதிலும் 'உணர்ச்சி விபரத்தின் படி மஹிந்த ராஜபக்ச வெல்லுவதற்கான வாய்ப்பு அதிகம்' என மேற்படி கட்டுரைகள் மேற்படி பதத்தைக் கூறி வாதிட்டன. சிங்கள மக்களிடம் காணப்படும் இன உணர்ச்சி விபரத்துக்குள்ளால் தேர்தலை அணுகுமாறு மேற்படி கட்டுரைகள் வேண்டி நின்றன.
இது ஏற்கனவே பொங்கு தமிழில் வெளிவந்த 'ஜனாதிபதித் தேர்தலில் சிம்மாசனம் அமரவுள்ள இராணுவ வாதம்' என்ற கட்டுரையில் காணப்படும் ஒரு பகுதியாகும்.
'இங்கு புள்ளி விபரம் பொன்சேகாவுக்கு சாதகமாய் உள்ளது. ஆனால் இதில் சிங்கள உணர்ச்சி விபரம் மகிந்தவுக்கு சாதகமாய் உள்ளது. இதில் யார் பதவிக்கு வந்தாலும் தென்னிலங்கை இரத்தாறுக்கு உரியதாக மாறக்கூடிய அரசியல் நிலவரமே மேலோங்கி உள்ளது'
உணர்ச்சி விபரத்தால் உருவாகக் கூடிய இனவாத அலைக்கு இறுதி நேரத்தில் சிங்கள மக்கள் உட்படுவரென்றும், அலைபாயும் வாக்குகள் மேற்படி இன உணர்ச்சிக்கு உட்படும்போது மஹிந்த ராஜபக்ச வெல்லுவதற்கான வாய்ப்பு உண்டென்று வாதிட்டதுடன், மஹிந்த ராஜபக்சவின் கையில் ஏழு மாகாண சபைகளும், ஏனைய உள்ளுராட்சி சபைகளும் இருப்பதனால் அந்த வண்டி, வாகன ஆளணி அதிகார வளங்களைப் பயன்படுத்தி அவர் இறுதியில் வெற்றி பெறமுடியும் என்ற விடயமும் பொங்கு தமிழ் கட்டுரைகளில் தெளிவுறச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.
மேலும் சிங்கள மக்களுக்கு இனவாதம் என்றால் அது சுதந்திரக் கட்சிதான் என்ற உணர்வு பெரிதாய் உள்ளது எனக் கூறிய ஒரு கட்டுரையானது, 1956ஆம் ஆண்டு பண்டாவின் இனவாத அலையையும், 2005 ஆம் ஆண்டு மகிந்தவின் மகிந்த சிந்தனை இன அழிப்பு அலையையும் அக் கட்டுரைகள் மேற்கோள் காட்டி மஹிந்த ராஜபக்ச தூண்டக் கூடிய இனவாத வெற்றியை அடையாளம் காட்டின.
மேலும் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டணி முடிவெடுத்த கட்டத்தின் பின்பு நிர்ணயகரமான வாக்கென்பது அலைபாயும் வாக்குகளே தவிர வேறல்ல என்பதை புரிந்த மஹிந்த, பின்பு அலைபாயும் வாக்குகளையே நிர்ணயகரமானதாகக் கருதி, இனவாத அடிப்படையில் அந்த வாக்குகளை பெற்றிடுவார் என்ற எச்சரிக்கையையும் பொங்கு தமிழ்க் கட்டுரைகள் வெளிப்படுத்தின. அரசியலை ஒரு விஞ்ஞானமாக கருதுமிடத்து இத்தகைய மதிப்பீடுகளைச் செய்வது கடினமல்ல.
தமிழ் மக்களின் பிணங்களில் இருந்து எழுந்த ஒரு சிறிய புழுவை அதிலிருந்தெழுந்த பெரியபுழு விழுங்கியுள்ளது. இனிப் பெரியபுழு தனக்குரிய பாதையில் சமையல் சட்டிக்குள் ஒரு நாள் போகும் நிலை உருவாகும் என்பது அரசியலின் தர்க்க பூர்வ வளர்ச்சிப் போக்காய் இருக்கும்.
ராஜபக்சக்களை சீனாவுடன் அடையாளம் காணும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும், சர்வதேச சமூகமும் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான அணியின் வெற்றியை அவாவி நின்றன. ஆனால் மஹிந்த ராஜபக்சவோ தீவிர இனவாதத்தால் தன்னை நிலைநிறுத்தி, மேற்படி மேற்குலகையும் மற்றும் சர்வதேச அரசுகளையும் தோற்கடித்துள்ளார்.
அவருக்கு அவரது வெற்றி ஆவேசத்தையும் மேற்படி நாடுகளுக்கு எதிரான ஏனைய ஒரு சர்வதேச அணியையும் அவர் நாடிச் செல்வதைத் தவிர வேறு வழியிருக்காது. அவர் சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு மேற்க்கோடு ஒரு நண்பனாகவும், இந்தியாவுடன் விருந்தினராகவும் இருக்க முடியாது. மஹிந்த ராஜபக்ச விரும்பினாலும் சர்வதேச விதியின்படி அது நடக்கப் போவதில்லை.
மஹிந்த ராஜபக்சவின் கரங்களை சீனா இனி பற்றிப் பிடிக்கும். சீன அனுசரணையுடன் வடகொரியாவும், பர்மாவும் இருப்பது எப்படிச் சாத்தியமோ அப்படி சீன – ராஜபக்ச உறவும் வலுவடைவது சாத்தியம். ஆனால் வடகொரியா, பர்மா போல இலங்கையை சீனாவின் கையில் விட்டுவைக்க அமெரிக்காவும், இந்தியாவும் தயாராக இருக்காது. ஏனெனில் அது மேற்படி இரு நாடுகள் சார்ந்த நலன்கள் மட்டுமன்றி, அந்த நாடுகளுடனான ஒரு பாரிய அரசியல், பொருளாதார, இராணுவ நலன் சார்ந்த ஒரு பெரிய அணிநாடுகளின் நலனும் சம்பந்தப்படும் விடயமாகும். சமரசங்களுக்குகான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் வரலாறு அதனைத் தாண்டி முரண்பாடுகளில் முட்டி மோதுவதிலேயே முடிவடையும்.
சிங்கள இனவாதத்தின் முள்ளிவாய்க்கால் வெற்றியுடன் சிங்கள அரசியலில் இரத்தக்களரி முளைகட்டிவிட்டது என்ற கருத்து ஏற்கனவே பொங்கு தமிழ்க் கட்டுரைகளில் வெளிந்திருக்கிறது. 2010 ஆம் ஆண்டு சிங்கள அரசியலில் இரத்தக் களரியான ஆண்டு என்றும் குறிப்பாக வரவிருக்கும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலை அண்டி, எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு எனக் கூறப்படும் சித்திரை மாதத்தை அண்டி இந்த இரத்தாறு ஊற்றெடுக்கும் என்றும் ஏற்கனவே கூறிய கருத்தை இங்கு மீண்டும் அழுத்திக் கூறுவது பொருத்தம்.
இதன் தொடர்ச்சியாக கூறக்கூடிய முக்கியமான கருத்தொன்று உண்டு. சிங்கள இனவாதம் ராஜபக்சக்கள், பொன்சேகாக்களுக்கு ஊடாக ஒரு சிங்கள இரத்தக் களரியைக் கருத்தரித்திருப்பது போலவே, இனி ராஜபக்சக்களின் அரசியலானது உள்நாட்டு இரத்தக் களரியைத் தாண்டி, வெளிநாட்டு அல்லது பிராந்திய ரீதியான இரத்தக் களரிக்கான கட்டத்தை இன்னும் சில ஆண்டுகளுள் அடையும்.
உள்நாட்டு இரத்தக் களரிக்கு சில மாதங்களும், வெளிநாட்டு இரத்தக் களரிக்கு சில ஆண்டுகளும் என இலங்கைத் தீவின் வரலாறு காத்திருக்கிறது. இத்தகைய முரண்பாட்டின் இறுதிக்கட்ட வெடிப்பானது தமிழீழம் எனும் ஒரு புதிய தேசம் உருவாவதை சாத்தியமாக்கும். இப்போது எதிர்ப்பவர்கள் அதனை ஆதரிப்பதைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இனிவரும் காலங்களில் இருக்காது என்பது வரலாற்றின் தர்க்கபூர்வ நியதியாய் அமையும்.
புழுவைப் புழு விழுங்கத் தொடங்கியுள்ளது.
'கட்டுண்டோம் பொறுத்திருப்போம். காலம் மாறும்’